உலகையே அடிமையாக்கிய இலங்கைத் தேயிலை | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன்
Description
உலகிலேயே மிகச்சிறந்த தேயிலை இலங்கை தேயிலை என்ற பெயரைப் பெற்றுக்கொள்ள ஜேம்ஸ் டெய்லரின் பங்களிப்பும் உழைப்பும் மிக மகத்தானதாக இருந்தது என்றாலும் இந்த நிலையை அடைவதற்கு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. அதற்குக் காரணம் இலங்கைத் தேயிலைக்கு முன்னதாகவே சீன, இந்திய தேயிலைகள் உலக சந்தையை மிக வலுவாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தமையாகும்.
1885 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தேயிலை கொள்வனவில் சீனத் தேயிலை 62% தினை தனது பங்காகக் கொண்டிருந்தது. இது 1895 ஆம் ஆண்டில் 14 % சதவீதமாக குறைந்து போனது. இக்காலத்தில் பிரித்தானியா 35% சதவீதமான தேயிலையை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்தது. பிரிட்டனில் இவ்விதம் இலங்கைத் தேயிலையின் நுகர்வின் அதிகரிப்பும் ஏனைய நாடுகளில் உருவாக்கப்பட்ட தேயிலைக்கான அதிகரித்த கேள்வியும் இலங்கையில் தேயிலை பயிர்ச் செய்கைக்கான ஆர்வத்தை சடுதியாக அதிகரித்தன.
உலகெங்கும் தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக சிலோன் டீ சிண்டிகேட் (Ceylon Tea Syndicate) மற்றும் தேயிலை நிதியம் (Tea Fund) ஆகிய அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நிகழ்த்தப்பட்ட கிளாஸ்கோ சர்வதேச கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் கலை கண்காட்சியில் இலங்கை தேயிலை " தேநீர் இல்லம் " மற்றும் " இலங்கை மன்று" ஆகிய மண்டபங்கள் உருவாக்கப்பட்டிருந்தன .
இந்த கண்காட்சியின் போது இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி எதிர்பாராத வகையில் இலங்கையின் தேநீர் இல்லத்திற்கு விஜயம் செய்து ஒரு கோப்பை தேநீர் அருந்தியமையானது உலகெங்கும் பேசப்படும் ஒரு பரபரப்புச் செய்தியானது, இலங்கைக்கு பெரும் விளம்பரத்தை பெற்றுக் கொடுத்தது.
#ceylontea